2041ல் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறும்: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா


கவுகாத்தி: அசாமில் முஸ்லிம் மக்கள் தொகை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் 30 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், 2041ல் அம்மாநிலத்தில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், கவுகாத்தியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "புள்ளிவிவர கூற்றுகளின் படி அசாமின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 40 சதவீதம் உள்ளனர். வரும் 2041ம் ஆண்டுக்குள், அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலமாக மாறும். இது நிஜம். இதை யாராலும் தடுக்க முடியாது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இந்து சமூகத்தின் மக்கள் தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் சமூகத்தினரிடையே மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை தடுத்து நிறுத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. அச்சமூகத்தினர் ராகுல் காந்தி சொல்வதை மட்டுமே கேட்பதால் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான விளம்பரத் தூதராக ராகுல் காந்தி பதவியேற்றால், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.” இவ்வாறு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.

x