கரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை; போராட்டத்தில் ஈடுபட்ட 24 மருத்துவர்கள் மீது வழக்கு


கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஊர்வலமாகச் செல்ல முயன்ற 24 மருத்துவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி கலைஞர் நினைவிடத்தில் மௌனப் போராட்டம் நடத்த திட்டமிட்டு கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த முயன்றதாலும் ஊர்வலமாகச் சென்றதாலும் மருத்துவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை திருவல்லிக்கேணி போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.

பின்னர் தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்ட அவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஊர்வலமாகச் சென்ற 24 மருத்துவர்கள் மீது திருவல்லிக்கேணி போலீஸார் சட்ட விரோதமாகக் கூடுதல், கலைந்து செல்ல மறுத்து சட்டவிரோத செயலில் ஈடுபடுதல் மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

x