5 மாநிலங்களில் கல்லா கட்டிய கிட்னி விற்பனை மோசடி கும்பல்: சுற்றி வளைத்த போலீஸார்!


புதுடெல்லி: டெல்லி, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் செயல்பட்டு வந்த கிட்னி விற்பனை மோசடி கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் பிடித்து கைது செய்துள்ளனர்.

டெல்லி என்சிஆர், பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் கிட்னி விற்பனை மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களாவர். இவர்களிடமிருந்து ஏராளமான செல்போன்கள், மடிக்கணினிகள், சிம் கார்டுகள், பணம் மற்றும் குற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த கும்பல், வங்கதேச நாட்டில் ஆதரவற்றவர்களிடம் சிறுநீரகங்களை ரூ.4 முதல் ரூ.5 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சிலரை வேலை தருவதாக கூறி அழைத்து வந்து கிட்னியை பறித்துள்ளனர். இதுமட்டுமின்றி உடல் உறுப்புகளைப் பெற்றவர்களும், உறுப்புகளை தானம் செய்தவர்களும் உறவினர்கள் என போலி ஆவணங்களும் தயாரித்துள்ளனர்.

இவ்வாறு பெறப்பட்ட சிறுநீரகங்களை ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விற்றுள்ளனர். நொய்டா மருத்துவமனையில் 15 முதல் 16 முறை சட்டவிரோத அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத அறுவைச் சிகிச்சை, மோசடிக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் விஜய குமாரியும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். ஒவ்வொரு கிட்னி அறுவை சிகிச்சைக்கும் மருத்துவர் விஜயகுமாரி தலா ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு அவர்களது நெருங்கிய உறவினர்கள் சிறுநீரகம் தானம் செய்யலாம். தொடர்பில்லாதவர்களிடமிருந்து சிறுநீரகம் தானம் பெறுவதற்கு அனுமதி பெற வேண்டும்.

சிறுநீரக நன்கொடையாளர்களின் எண்ணிக்கையை விட சிறுநீரகம் தேவைப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி, சிறுநீரக மாற்று மோசடி கும்பல் பணம் ஈட்டி வருகின்றனர். அத்தகைய கும்பலைதான் தற்போது டெல்லி போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

x