மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசத்திற்கு சுரங்கம் அமைத்து சிலைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள குல்தாலி என்ற பகுதியைச் சேர்ந்த சதாம் சர்தார் என்பவர் பல்வேறு நபர்களிடம் சிலைகளை விற்பனை செய்பவராக அறிமுகமாகி அவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் அவற்றை வாங்கியவர்களுக்கு அது போலி சிலைகள் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பலரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக போலீஸார் அவரது கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது சதாமின் வீட்டில் இருந்த 2 பெண்கள் மற்றும் சதாமின் சகோதரர் சர்துல் உட்பட மூவர் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தி, மூவரையும் கைது செய்தனர். ஆனால் கிராம மக்கள் உதவியுடன், சதாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார், சதாமை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்த போலீஸார் அவரது வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சதாமின் படுக்கையறையின் கீழே சுமார் 40 அடி நீள சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் வழியாக சென்றபோது அண்டை நாடான வங்கதேசத்திற்கு செல்லும் மத்லா ஆற்றை அந்த சுரங்கம் அடைந்தது தெரிய வந்தது. இந்த சுரங்கத்தை பயன்படுத்தியே, சதாம் முன்பு போலீஸாரிடமிருந்து தப்பியோடியிருக்கலாம் என கருதப்படுகிறது.