காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பெண் வீட்டார் பேச்சைக்கேட்டு பட்டியலினத்தை சேர்ந்த மாணவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் மணலியில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் சுடரொளி சுபா(24). கடந்த 2019-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த போது, அதே பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி(31) என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் வேறொரு பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.
நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி சுடரொளி சுபாவும், குருசாமியும் சென்னையில் உள்ள பெரியார் திடலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து வழக்கம்போல் வீட்டிற்குச் சென்ற சுடரொளி எதுவும் நடக்காதது போல் வீட்டில் இருந்தார். பின்னர் 15-ம் தேதி சுடரொளி சுபா தனது வீட்டில் இருந்த சுமார் 85 சவரன் நகை, 5 லட்சம் பணம், லேப்டாப் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவர், மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மகளைத் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் சுடரொளியின் தந்தை கோவிந்தன், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் ’மிஸ்ஸிங் வழக்கு’ பதிவு செய்து சுடரொளி செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அதில் அவர் பொள்ளாச்சியில் இருப்பது தெரியவந்தது. உடனே ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸார் பொள்ளாச்சிக்கு விரைந்து சென்று சுடரொளியைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சுடரொளி, குருசாமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் மேஜர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்னை திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து சுடரொளியின் தந்தை கோவிந்தன் கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராமை சந்தித்து மகள் எங்களுக்கு தேவையில்லை. அவர் கொண்டு சென்ற பணம், நகையை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார். பின்னர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கண்ணன் ’பெண் காணவில்லை’ என்ற பிரிவை மாற்றி வீடு புகுந்து நகை திருடுதல், ஆள்மாறாட்டம், உள்ளிட்ட (380 ,457, 170(b) ) 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குருசாமியை தேடிவந்தனர்.
நேற்று குருசாமி கொரட்டூர் பகுதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற போலீஸார் குருசாமியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குருசாமியை போலீஸ் பிடித்துச் சென்ற தகவல் அறிந்து அவரது பெற்றோர் மற்றும் வழக்கறிஞர்கள் ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண் காணவில்லை என்ற வழக்குப் பிரிவை மாற்றி குருசாமி மீது வீடு புகுந்து நகை,பணம் திருடியதாக வழக்குப் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பணம், நகையை எடுத்து வந்த சுடரொளியை விட்டுவிட்டு இவ்வழக்கில் குருசாமி மீது பொய் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க முயல்வது சட்டவிரோதச் செயல் என எதிர்ப்பு தெரிவித்ததுடன், இப்பிரச்சினையை உடனே உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து குருசாமியிடம் இருந்து 15 சவரன் நகையை வாங்கி சுடரொளி பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு போலீஸார் குருசாமியை விடுவித்தனர்.
மேலும் பெண் வீட்டார் பேச்சைக் கேட்டு வழக்குப் பிரிவை மாற்றி குருசாமியை கைது செய்த திருமங்கலம் காவல் நிலையை ஆய்வாளர் கண்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.