`வீடு கட்டும் பணி தொடங்க லீவு கேட்டும் தரவில்லை!'- சப் இன்ஸ்பெக்டர் வெளியிட்ட ஆடியோ வைரல்


மணிமாறன்

வீடு கட்டும் பணிகள் தொடங்குவதற்கு லீவு கேட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு உயரதிகாரிகள் லீவு தர மறுத்தனர். இதனால் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி போக்குவரத்து துணை ஆணையருக்கு உதவி ஆய்வாளர் அனுப்பிய ஆடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சென்னை பரங்கிமலை போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மணிமாறன். இவர் தனது உயர் அதிகாரிகள் விடுப்பு தர மறுத்துவிட்டதாகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி போக்குவரத்து துணை ஆணையருக்கு அனுப்பிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் உதவி ஆய்வாளர் மணிமாறன், தனது வீடு கட்டும் பணியைதொடங்குவதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது உயர் அதிகாரிகளான போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர் திருவேங்கடம் ஆகியோரிடம் விடுப்பு கோரி விண்ணப்பித்ததாக தெரிவித்தார். மேலும், தனக்கு விடுப்பு தர மறுப்பு தெரிவித்த உயர் அதிகாரிகள் இருவரும் தன்னை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுப் பேசினார்.

மேலும், ஞாயிற்றுக் கிழமை முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு, முக்கிய நிகழ்வுகள் போன்ற எதுவும் இல்லாத நிலையிலும் தனக்கு விடுப்பு தர மறுத்து, தனது வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சியில் கூட பங்கேற்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை உயர் அதிகாரிகள் அளித்துள்ளதாகவும், தமிழக காவல்துறையில் நிறைய காவலர்கள் தற்கொலை செய்துகொள்ள இதுபோன்ற காவல்துறை அதிகாரிகளே காரணம் எனவும், உயர் அதிகாரிகள் யாரும் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்களா? விடுப்பு எடுத்துக்கொள்ள மாட்டார்களா? என்றும் அந்த ஆடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் என்ற அதிகாரத்தை வைத்து பணியிடை நீக்கம் செய்வதும், வேறு வகையில் தண்டிப்பதும் என்பது முதலான அடக்குமுறையைக் கையாண்டு வருவதாகவும், இந்த நிலை விரைவில் மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், காழ்ப்புணர்ச்சியில் அதிகாரிகள் தனது வளர்ச்சியைக் கெடுக்கும் எண்ணத்தில் தான் பணிக்கு வரவில்லை என கட்டுப்பாட்டு அறையில் பதிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உயர் அதிரிகாரிகளை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றதுடன் நேரில் சென்று பார்க்க முயன்றும் முடியாத காரணத்தால் ஆடியோ பதிவு வெளியிடுவதாக உதவி ஆய்வாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற அதிகாரிகள் இருக்கும் வரை காவல்துறையில் அடிமட்டத்தில் இருக்கும் காவலர்களின் மன அழுத்தமும் தற்கொலைகளும் குறையாது என தெரிவித்துள்ளார்.

உதவி ஆய்வாளரின் ஆடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

x