கன்வார் யாத்திரை: உணவக உரிமையாளர்கள் பெயர் பலகை வைக்க வேண்டுமென உ.பி. முதல்வர் உத்தரவு


லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்களின் முன்பு, அவற்றின் உரிமையாளரின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி, கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் ஒவ்வொரு உணவுக் கடை அல்லது வண்டி உரிமையாளரும் தங்களின் பெயரைப் பலகையில் வைக்க வேண்டும். உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் காவல்துறை இதுபோன்ற ஓர் உத்தரவை பிறப்பித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து காவல் துறை அந்த உத்தரவை திரும்பப்பெற்றது.

இது நடந்த ஒரே நாளில், தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் அதுபோன்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளார். கன்வார் யாத்ரீகர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின்படி, ஒவ்வொரு உணவகமும், அது உணவகமாக இருந்தாலும், சாலையோர தாபாவாக இருந்தாலும், உணவு வண்டியாக இருந்தாலும், அதன் உரிமையாளரின் பெயரைக் காண்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவானது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் கபில்தேவ் அகர்வால் கூறுகையில், "முஸ்லிம்கள் சிலர், இந்து பெயர்களின் போர்வையில், புனித யாத்ரீகர்களுக்கு அசைவ உணவுகளை விற்கின்றனர். வைஷ்ணோ தாபா பந்தர், ஷாகும்பரி தேவி போஜனாலயா, சுத்த போஜனாலயா போன்ற பெயர்களை எழுதி வைத்து அசைவ உணவுகளை விற்கிறார்கள்.” என்றார்.

கன்வார் யாத்திரை என்பது காவடி போன்ற அமைப்பில் இரு முனைகளிலும் புனித நீர் கொள்கலன்கள் இருக்கும். வடமாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 இடையிலான காலத்தில் இந்த காவடியை (கன்வார்) ஏந்தி யாத்திரை சென்று புனித நீர் சேகரித்து சிவாலயங்களுக்கு அபிஷேகங்களுக்கு வழங்கப்படுகிறது.

உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி, பிஹாரில் உள்ள சுல்தங்கஞ்ச், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் வாரணாசி போன்ற புனிதத் தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள், கன்வார் யாத்திரை செய்கின்றனர். நிகழாண்டு கன்வார் யாத்திரை வரும் 22ம் தேதி தொடங்க உள்ளதால் உத்தரப்பிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

x