நாட்டுப் படகு உடைப்பு; நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய தமிழக மீனவர்கள்: இலங்கை கடற்படை அட்டகாசம்


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் நாட்டுப்படகை மோதி சேதப்படுத்திய சம்பவம் மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி அடிமை. இவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் அவருடன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த லிவிங்ஸ்டன், சபரி, திருமன் ஆகிய நான்கு பேரும் மண்டபம் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே இந்திய கடல்பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிப்பதாக தங்கள் ரோந்து படகின் மூலம் மீனவர்களின் நாட்டுப்படகில் மோதியதாகவும், இதனால் நாட்டுப்படகின் முன்பகுதி இரண்டாக பிளந்த நிலைக்கு ஆனதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தங்களை தொடர்ந்து கைது செய்து அடிப்பார்கள் என்னும் அச்சத்தில் கடலில் குதித்தனர். இலங்கை கடற்படையினர் சென்றதும், அந்த வழியாக வந்த இன்னொரு விசைப்படகின் உதவியோடு தப்பி கரை சேர்ந்துள்ளனர். இவர்களின் நாட்டுப்படகு, மீன்பிடி சாதனங்கள் ஆகியவையும் இலங்கை கடற்படையின் தாக்குதலால் சேதம் ஆனதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

x