உத்தராகண்டில் கட்டுமானப் பணியின் போது 2வது முறையாக இடிந்து விழுந்த பாலம்


ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலத்தில் 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த ஆற்றுப்பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரப்பிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு நார்கோட்டா பகுதியில் உத்தராகண்ட் மாநிலத்தின் அடையாளம் என்று அழைக்கப்படும் வகையில் புதியதாக பாலம் கட்ட கடந்த 2021ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆற்றின் மீது 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணியின் போது திடீரென இந்த பாலம் இடிந்து விழுந்தது. அப்போது இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என கட்டுமான நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை இந்த பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்தது. தரம் இல்லாத மோசமான கட்டுமான பொருட்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. நல்வாய்ப்பாக பாலம் இடிந்த போது, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் மக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், பாலத்தின் அஸ்திவாரம் உறுதியாக இருப்பதாகவும், இடைப்பட்ட பகுதி மட்டுமே சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது உத்தராகண்டிலும் பாலம் இடிந்து விழுந்துள்ளதை அடுத்து, பிரதான எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன. பீகாரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 மேம்பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x