வாகன முகப்பு கண்ணாடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாவிட்டால் இருமடங்கு சுங்கக் கட்டணம்: என்எச்ஏஐ அறிவிப்பு


புதுடெல்லி: வாகனங்களின் முகப்பு கண்ணாடிகளின் உள்பக்கம் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் (FASTag) ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லையெனில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்வோர் தங்கள் வாகனங்களின் கண்ணாடிகளில் வேண்டுமென்றே ஃபாஸ்டேக்-ஐ ஒட்டாமல் செல்வதைத் தடுக்க, அதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து இரு மடங்கு உபயோகிப்பாளர் கட்டணத்தை வசூலிக்க வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) வெளியிட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முகப்பு கண்ணாடிகளில் ஃபாஸ்டேக் பொருத்தப்படாத வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பக்க கண்ணாடியில் ஃபாஸ்டேக் இல்லாவிட்டால் இரு மடங்கு பயனர் கட்டணத்தை வசூலிக்க அனைத்து பயனர் கட்டண வசூல் முகவர் மற்றும் சலுகையாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்பக்க கண்ணாடியில் நிலையான ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழைவதற்கான அபராதம் குறித்து நெடுஞ்சாலைப் பயணிகளுக்குத் தெரிவிக்கும் வகையில், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இந்தத் தகவல் தெரியும் வகையில் வைக்கப்படும். மேலும், ஃபாஸ்டேக் ஒட்டப்படாத வாகனங்களின் பதிவு எண்ணுடன் கூடிய சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008-ன் படி என்எச்ஏஐ தேசிய நெடுஞ்சாலைகளில் பயனர் கட்டணத்தை வசூலிக்கிறது. தற்போது, நாடு முழுவதும் சுமார் 45,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளுக்கு சுமார் 1,000 சுங்கச் சாவடிகள் மூலம் பயனர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

x