பெங்களூருவை அச்சுறுத்தும் டெங்கு: விழிப்புணர்வு ரீல்ஸ்-களுக்கு லட்ச ரூபாய் பரிசு!


பெங்களூரு: டெங்கு விழிப்புணர்வு ரீல்ஸ்களுக்கு லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ள பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், டெங்குவை கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி, உரிய நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு என்ற போர்வையில், அதிகளவில் செலவு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரீல்ஸ் தயாரிப்பவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சன்மானம் வழங்க மாநகராட்சி முன்வந்துள்ளது. இந்த ரீல்ஸ் போட்டிக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வரும் மாநகராட்சி சுகாதாரத்துறை, ரீல்ஸ் பகிரும் அனைவருக்கும் டெங்கு போராளி என்ற பட்டத்தை வழங்க உள்ளது.

மாநகராட்சி சமூக வலைதளங்களில் வெளியாகும் முதல் ஐந்து சிறந்த ரீல்ஸ்களுக்கு தலா ரூ.25,000 பரிசாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இரண்டாம் பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ.10,000, அதிக மாணவர்கள் ரீல்ஸ் தயாரிக்கும் பள்ளிக்கு ரூ.1 லட்சமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்க ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கு 35,000 ரூபாய் சன்மானம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியின் (BBMP) இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி முன்வந்திருப்பது சரிதான். மாறாக, நகரில் உரிய தூய்மையைப் பராமரிக்கவும், கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்காக இதுபோன்ற ரீல்ஸ்களை செய்தும் பலன் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது சரிதான், ஆனால் இந்த வேலை வெறும் ரீல்ஸ்களில் மட்டும் நின்றுவிடக் கூடாது. ரீல்ஸ்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு, கொசுக்களை ஒழிக்காமல் விட்டு விடக்கூடாது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மாநகராட்சியின் இந்த ரீல்ஸ் போட்டி டெங்குவை கட்டுப்படுத்த உதவுமா அல்லது மாநகராட்சி கஜானாவை காலி செய்ய வழி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

x