அரசு மருத்துவமனையில் பெண்ணை பாம்பு கடித்தது: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்


பாலக்காடு: மாவட்ட அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்ததாக பெண் புகார் அளித்த நிலையில், அவரை பாம்பு கடிக்கவில்லை என்று சுகாதாரத்துறை இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், பாலக்காடு புதுநகர் கரைப்போட்டைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் சித்தூர் தாலுகாவில் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மருத்துவ சிகிச்சைக்காக தனது மகளுடன் சென்றுள்ளார். அப்போது மகளின் சிகிக்சைக்காக சிறுநீர் மாதிரியை சேகரித்த போது தரையில் கொட்டியது.

இதனால் சிறுநீரை சுத்தம் செய்ய துடைப்பத்தை எடுக்க காயத்ரி சென்றார். அப்போது அவரது கையை பாம்பு கடித்ததாக புகார் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பெண் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவரை பாம்பு கடிக்கவில்லை என்று சுகாதாரச்சேவைகள் இயக்குநர் (டிஹெச்எஸ்) ரீனா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதற்கட்ட பரிசோதனையின் போது பெண்ணின் கையில் பாம்பு கடித்தற்கான அடையாளங்கள் காணப்படவில்லை. அங்கு பிடிக்கப்பட்ட பாம்பு பாட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. அது விஷமற்றது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. என்று கூறினார். தற்போது காயத்ரி உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எனினும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.

x