சண்டிகர் - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பயணிகள் உயிரிழப்பு


தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

கோண்டா: ஹரியாணா தலைநகர் சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ரூகருக்கு சண்டிகர் - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. இந்த ரயில் உத்தர பிரதேசத்தின் கோண்டா பகுதியில் நேற்று மதியம் 2.35 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, பிகாரா என்ற இடத்தில் தடம் புரண்டது.

இதில் ரயிலின் 4 ஏ.சி பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் கவிழந்தன. இதில் 2 பயணிகள் உயிரிழந்தனர், 20 பயணிகள் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தடம்புரண்ட ரயிலில் இருந்து பயணிகள் வெளியேறி தங்கள் உடமைகளுடன் தண்டவாளம் அருகே நின்றனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

விபத்து நடந்த இடத்துக்கு மாவட்ட நிர்வாகத்தினர் சென்று தேவையான உதவிகளை அளிக்கஉத்தரவிடப்பட்டதாக உ.பி. முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. கோண்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை கவனித்தனர்.

இந்த விபத்து குறித்து பொதுமக்கள் தவகல் அறிய உதவி எண்களையும் ரயில்வே துறை வெளியிட்டது. லக்னோ - 8957409292, கோண்டா - 8957400965, திப்ரூகர் - 9957555960 ஆகியஎண்களில் பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்புகொண்டு தகவல் அறியலாம்.

ரயில் தடம்புரள்வதற்கு முன்பு பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக, ரயில் இன்ஜின் டிரைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

x