100 எம்எல்ஏ.க்கள் பிரிந்து வந்தால் ஆட்சி அமைக்கலாம்: பாஜகவினருக்கு அகிலேஷ் யாதவ் சூசக அழைப்பு


லக்னோ: உத்தரபிரதேச பாஜகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்க அணி மாறுமாறு ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கே.பி.மவுரியா இடையே மோதல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மவுரியா கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். இதையடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டிய அமைச்சரவை கூட்டத்தில் மவுரியா கலந்துகொள்ளவில்லை.

அன்று மாலையில் லக்னோ திரும்பிய மவுரியா, “அரசை விட கட்சிதான் பெரியது. கட்சியை விட பெரியவர் யாரும் இல்லை. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சித் தொண்டர்களை மதிக்க வேண்டும்” என்றார்.

மவுரியா டெல்லி தலைவர்களை சந்தித்த பிறகு இவ்வாறு கூறியது, முதல்வர் யோகியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “மழைக்கால சலுகை: நூறை கொண்டுவாருங்கள், அரசு அமையுங்கள்” என்று கூறியுள்ளார்.

இப்பதிவில் அகிலேஷ் எவரது பெயரையும் குறிப்பிடவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் விளக்கம் அளிக்கையில், “முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்திஅடைந்து, கட்சி மாற விரும்பும் பாஜகவினருக்கான செய்தி இது.உ.பி.யில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 100 பேரின் ஆதரவை நாங்கள் பெற்றால் எளிதில் ஆட்சி அமைக்கலாம். இதையே அகிலேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்” என்று கூறினார்.

x