'குற்றம் செய்த சிறுவனைத் திருத்திய நீங்கள் அவனுக்கு அம்மா': பெண் காவலரை மனம் திறந்து பாராட்டிய நீதிபதி


குற்றம் புரிந்த சிறார்களை திருத்தி நல்வழிப்படுத்தி காவல்துறையினர் மகிழ்ச்சி காணவேண்டும், வெறும் புள்ளி விவரங்களுக்காக மட்டும் வழக்குகள் பதிவு செய்வதை காவல்துறையினர் கைவிட வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் தெரிவித்தார். அப்போது பெண் காவலரை அழைத்து, ‘குற்றம் செய்த சிறுவனைத் திருத்தி அன்பு காட்டிய நீங்கள் அவனுக்கு அம்மா’ என்று பாராட்டினார்.

முதல் முறையாக சிறிய குற்றங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக சிறைக்குச் செல்லும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் விதமாக சென்னை காவல்துறை, சமூக நல பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக் குழு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் (PRISM) மூலம் 'பறவை' என்ற திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் முதன் முறையாக குற்றச் செயல்புரிந்து சிறைத்தண்டனை அனுபவிக்கும் சிறுவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து இத்திட்டம் மூலமாக சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள், அவர்களின் வருங்காலம் தொடர்பான ஆலோசனைகள், படிப்பறிவு, வேலை வாய்ப்பு போன்றவை உருவாக்கி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 'பறவை' திட்டம் குறித்து துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு விளக்கும் வகையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் இன்று ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் குமார் புஜாரி ஆகியோர் பங்கேற்று 'பறவை' திட்டம் குறித்தும், முதல் முறை குற்றவாளிகளான இளம் சிறார்களிடம் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்.

இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவல் சிறுவர், சிறுமியர் மன்றங்களைச் சேர்ந்த இளம் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்று தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வாறு திசைமாறியது என்பது குறித்தும், பறவை திட்டம் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தனர் என்பது குறித்தும் கண்ணீருடன் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் குமார் புஜாரி பேசுகையில், "முதல் முறை குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களைக் கையாளும் நடைமுறைகள் கடுமையாக இல்லாமல், உளவியல் ரீதியாக கையாண்டு அவர்களைத் திருத்த காவல்துறையினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும், குற்றச்செயல் புரிந்தவர்களை 41 A நோட்டீஸ் அனுப்பி விசாரித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் நடைமுறையை காவல் துறையினர் மீண்டும் கொண்டுவர வேண்டும் " என்றார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், "ஒவ்வொரு சிறார்களுக்கும் முதல் 15 வருடங்கள் மிக முக்கியமானவை. அந்த வயதில் கல்வி நிலையங்களுக்குச் செல்லாமல், தவறான பாதையில் சென்று குற்றம் செய்து காவல்துறையிடம் சிக்கினால், வாழ்க்கை திசைமாறும் என்பதை சிறார்கள் உணர வேண்டும் என தெரிவித்தார். ஆனால் சிறார்கள் ஒருமுறை குற்றம் செய்துவிட்டால் வாழ்க்கை பாழாகிவிட்டதாக எண்ணக் கூடாது. காவல்துறையினர் மீண்டும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பேசுகையில், " காவல் துறையினரின் காக்கிக்குப் பின்னால் ஒரு மனிதம் உள்ளது என்பதை மறந்து காவல் நிலையங்களில் உள்ள தலைமைக் காவலர்கள் கொடுக்கும் தவறான ஆலோசனைகளை கேட்டு காவல் அதிகாரிகள் வீணாகின்றனர்.

மேலும், காதல் திருமண விவகாரங்களில் சிறார்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வது, அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து பாழாக்கிவிடும். பருவக் காதல் விவகாரங்கள் அவர்களின் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச் செயலால் இல்லை.

காதல் விவகாரங்களில் கைது செய்தாலும் பழி, கைது செய்யாவிட்டாலும் பழி என்ற நிலைதான் காவல் துறையினருக்கு உள்ளது. அதிலும் காதல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவராக இருந்துவிட்டால் அரசியல் ரீதியாகவும், உயரதிகாரிகள் மூலமும், ஊடகங்கள் மூலமும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

மேலும், கோவையில் கேரள பெண் காதலனால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யபட்ட வழக்கை சுட்டிக்காட்டி, ஊடகங்கள் குற்றத்தை குற்றமாக பார்க்க வேண்டும். அதற்கு ஒரு சாயம் பூசுவதை விடுத்து காவல் துறையினரின் அழுத்தத்தைக் குறைக்க முயல வேண்டும். ஆட்டோ சங்கர் வழக்கு, ராமஜெயம் கொலை வழக்கு போன்ற பல வழக்குகள் இதுபோல நடந்துள்ளன.

காவல் துறையினர் குற்றச்செயல் புரிந்த சிறார்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதிலேயே மகிழ்ச்சி காணவேண்டும். வெறும் புள்ளி விவரங்களுக்காக மட்டும் வழக்குகள் பதிவு செய்வதை காவல்துறையினர் கைவிட வேண்டும்.

சிறைத்துறை டிஜிபி கூறியதுபோல 41 A நோட்டீஸ் கொடுத்து விசாரித்து தகுந்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதை அனைவரும் தீர்மானிக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் தவறான பாதையில் சென்ற தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றி நல்வழிப்படுத்தியதாக இளம் சிறார்கள் சிலர் பெண் தலைமைக் காவலரை சொந்த சகோதரியாக நன்றியுடன் பார்ப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்று கூறிய நீதிபதி பி.என் பிரகாஷ், குறிப்பிட்ட பெண் தலைமைக் காவலர் அனுசுயாவை அழைத்து ’நீங்கள் அந்தச் சிறுவனுக்கு அக்கா இல்லை அம்மா’ " எனக்கூறி பாராட்டினார்.

x