மாணவி பிரியாவின் மரண வழக்கில் தலைமறைவான இரண்டு மருத்துவர்களைப் பிடிக்க துணை ஆணையரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
சென்னை வியாசர்பாடி எம்.எம் கார்டன் பகுதியைச் சேரந்த மாணவி பிரியா (17) முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக கடந்த அக்டோபர் 28-ம் தேதி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் பிரியாவிற்கு மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த அறுவை சிகிச்சைக்குப் பின் மாணவி பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த நவம்பர் 8-ம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரியாவுக்கு காலில் ரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவி பிரியா நவம்பர் 15-ம் தேதி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம் என தெரியவந்த நிலையில், பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரவள்ளூர் போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் சிங்கார வடிவேலன் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனிக்குழு நடத்தி முடித்த விசாரணை அறிக்கையை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் நவம்பர் 17-ம் தேதி காவல்துறையிடம் வழங்கப்பட்டது.
மருத்துவ அறிக்கையில் மாணவி பிரியாவின் மரணம் மருத்துவர்களின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சை காரணமாக நிகழ்ந்துள்ளது எனவும், இச்சம்பவத்தில் அறுவை சிகிச்சை செய்தவர், மயக்க மருந்து நிபுணர், பணி மருத்துவ அதிகாரி, எலும்பியல் நிபுணர் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் பணியில் இருந்த வார்டு ஊழியர் உள்ளிட்டோர் மீது தவறு உள்ளது என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உட்பட இதில் தொடர்பு உடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தனிக்குழு விசாரணை தொடர்பான மருத்துவ அறிக்கை காவல்துறை மூலம் சட்ட வல்லுநர்களுக்கு அனுப்பப்பட்டு எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் உள்ளிட்டோர் மீது 304 (a) அஜாக்கிரதையாக மற்றும் அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் பல்வேறு அழைப்புகளில் இருந்து மிரட்டல்கள் வருவதாகவும், பாதுகாப்பு கருதியே தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் மருத்துவர்கள் சார்பில் அவர்களது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தின் போது சம்பவம் நடந்து வெகு நாட்கள் ஆகாத நிலையில், வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும், மருத்துவர்கள் இருவரும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சரணடைய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்ததுடன் முன்ஜாமீன் வழங்க மறுத்து, முன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை 2 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மாணவி பிரியா உயிரிழந்த விவகாரத்தில், தவறான சிகிச்சை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக உள்ள இரு மருத்துவர்களையும் பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.