அனுமனுக்கு கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் சகோதரர்கள் - ஆந்திராவில் ஆச்சரியம்!


ஆந்திரா: முஸ்லிம் சகோதரர்கள் இருவர் அனுமனுக்கு கோயில் கட்டி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

இந்தியாவில் பல சாதிகள் மற்றும் மதங்கள் உள்ளன. ஆனால் சாதி, மதம் தாண்டி பலர் மத நல்லிணக்கத்துக்கு முன்னுதாரணமாய் திகழ்கின்றனர். அப்படி இருவர் தான் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஃபெரோஸ், சந்த் பாஷா சகோதர்கள்.

சித்தூர் மாவட்டம் புலிச்சேரல் மண்டலம் கே.கோத்பேட்டா கிராமத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அனுமனுக்கு கோயில் கட்ட ஆரம்பித்தனர். இவர்கள் தங்கள் தந்தையின் லட்சியத்தின்படி இந்தக் கோயிலை கட்டுவதாக கூறுகின்றனர். தங்கள் முன்னோர்கள் கூறிய வார்த்தைகளின்படி இப்பணியை செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

கோயிலில் ஏழு சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி துவங்கியுள்ளதாக ஃபெரோஸ் தெரிவித்தார். 2010-ம் ஆண்டு இந்த கோயில் கட்டும் பணி துவங்கப்பட்டதாக கூறிய அவர், தங்களது சக்திக்கு மீறிய செலவில் இந்த கோயிலைக் கட்டுவதாக கூறினார். இக்கோயிலின் வளாகத்தில் அனுமன், விநாயகர், சாய்பாபா சன்னதிகள் அருகருகே கட்டப்பட்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தற்போது வெங்கடேஸ்வரா கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. நன்கொடையாளர்கள் உதவி செய்தால் மீதமுள்ள மற்ற சிலைகளை நிறுவி கோயில் கட்டும் பணியை முடிந்து விடும் என்று அவர் கூறினார். முஸ்லிம் சகோதரர்கள் இந்துக் கோயிலைக் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

x