நகைக்கடையில் 2.5 கிலோ தங்கநகைகள் கொள்ளை: தலைமறைவான ஊழியரைத் தேடும் போலீஸார்


1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர் உள்பட இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கில் மனோஜ் ஜெய்ஸ்வால் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் பணியாற்றி வந்தார். அவரிடம் 2.5 கிலோ எடையுள்ள காதணிகள், நெக்லஸ்கள் உள்ளிட்ட தங்கநகைகளை சிறு, சிறு நகைக்கடைகளில் ஒப்படைக்க வேண்டும் என வழங்கப்பட்டது. ஆனால், அந்த நகைகளுடன் அனில்குமார் தலைமறைவானார். இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் மனோஜ் ஜெய்ஸ்வால் போலீஸில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், 2.5 கிலோ நகைகளை அனில்குமார் கொள்ளையடித்ததுடன் டெல்லியில் இருந்து பிஹாருக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. ஜார்க்கண்டைச் சேர்ந்த அனில்குமாரின் மைத்துனர் சோட்டு ராஜாக்(26) பிஹாரில் இருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது. அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு டெல்லி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 1.890 கிலோ தங்க ஆபரணங்கள், காதணிகள், நெக்லஸ் உள்ளிட்டவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், சோட்டு ராஜாக்கை நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அனில் தனது நண்பர் தீபக்குமாருடன் தனது வீட்டிற்கு வந்து நகைகளைப் பத்திரமாக வைத்திருக்குமாறு ஒப்படைத்ததாக கூறினார். இதையடுத்து தப்பிச் சென்ற நகைக்கடை ஊழியர் அனில்குமார், அவரது நண்பர் தீபக்குமார் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

x