ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு: அரசுப் பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர்


புதுச்சேரி: ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பள்ளியில் இருந்து மாணவர்களை பெற்றோர் அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை பூர்ணாங்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியையாக பாத்திமா என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அண்மையில் காரைக்காலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு மாணவர் மற்றும் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு ஆசிரியை பாத்திமா நன்றாகப் பாடம் எடுப்பார் என கூறப்படுகிறது. அதனால் அவரை மாற்றக்கூடாது எனக்கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவ - மாணவியர் இன்று பள்ளியின் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி நேரில் வந்து அனைத்து பெற்றோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் வகுப்பறையில் இருந்த மாணவர்களை பெற்றோர் வெளியே அழைத்துச் சென்றனர். மேலும், “ஆசிரியை பாத்திமா மீண்டும் இந்தப் பள்ளிக்கு வரவில்லை என்றால், நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

x