காரைக்கால்: ‘மாணவர் ஆட்சியர்’ திட்டத்தின் கீழ் முதல் மாணவியாக, அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கும் பி.லித்யாஸ்ரீ இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டனுடன் இணைந்து பணியாற்றினார்.
மாவட்ட நிர்வாக முறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் குறித்து மாணவர்கள் முழுமையாகவும், நேரடியாகவும் புரிந்துகொள்ளும் விதமாக ‘மாணவர் ஆட்சியர்’ என்ற திட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டனால் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைவதற்கான சிந்தனையை தூண்டும் வகையிலும், இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் நாட்டம் ஏற்படுத்தும் வகையிலும், ஆக்கபூர்வ செயல்பாடுகளை அவர்கள் மேற்கொள்ளும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை, அரசுப் பள்ளி மாணவர்களில் நன்றாக படிக்கும் மாணவர் ஒருவரை தேர்வு செய்து, அவர்களை ஒரு நாள் முழுமைக்கும் ஆட்சியருடன் இணைந்து பணி செய்யவைப்பது, அரசுத்துறைகளுக்கு ஆய்வுக்குச் செல்லும் ஆட்சியருடன் சென்று வருவது போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆட்சியருடன் ஒருநாள் இணைந்து பணியாற்ற, காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் பி.லித்யா ஸ்ரீ என்ற மாணவி கல்வித் துறையால் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று ஒரு நாள் அவர் ஆட்சியர் து.மணிகண்டனுடன் திருநள்ளாறு நளன் குளத்தைச் சுற்றியுள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் சென்று மாவட்ட நிர்வாகம், ஆட்சியர் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களின் பணிகள் குறித்து அறிந்து கொண்டார்.
இது குறித்து பேசிய ஆட்சியர் து.மணிகண்டன், “இம்மாணவி ஆட்சியரின் பணிகள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், வளர்ச்சித் திட்ட செயல்பாடுகள் போன்றவற்றை தெரிந்து கொண்டு, தனது அனுபவங்களை சக மாணவ - மாணவியருடன் பகிர்ந்து கொள்ள இது உதவும். இத்தகைய முயற்சி மாணவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வியை மேம்படுத்த உதவும்” என்றார்.
திருநள்ளாறு நளன் குளத்தைச் சுற்றி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், “பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை முறைப்படுத்த வேண்டும். தரமற்ற உணவுகள் வழங்குவதை தடுப்பதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை சுற்றியுள்ள கடைகளுக்கு கோயில் நிர்வாகம் நிரந்தர இடம் ஒதுக்கித்தர வேண்டும்” என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின் போது, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குநர் ராஜேஸ்வரி, முதன்மைக் கல்வி அதிகாரி விஜய மோகனா, ஆட்சியரின் செயலர் பொன்.பாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.