கார்த்திகை முதல் நாளில் ஐயப்பனுக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள்!


கார்த்திகையில் ஐயப்பனுக்கு விரதம் தொடங்கிய பக்தர்கள் (கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்)

கார்த்திகை முதல்நாளில், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள் ஏராளமான பக்தர்கள்.

கார்த்திகை மாதம் முதல் தேதி வந்துவிட்டாலே, அற்புதமான கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். கார்த்திகைப் பிறப்பில் விரதம் மேற்கொண்டு, தை மகர ஜோதியில் தரிசிக்கும் பக்தர்களும் உண்டு. ஒரு சிலர், கார்த்திகை மாதத்தில் விரதம் மேற்கொண்டு, மார்கழி தொடங்குகிற தருணத்தில், மார்கழிக்கு முன்னதாக என்றெல்லாம் ஐயப்ப சுவாமியைத் தரிசிக்கக் கிளம்புவார்கள்.

ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்பவர்கள், குருசாமி துணையுடன் மலைக்கு இருமுடி அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கார்த்திகை தொடங்கியது முதலே கடும் விரதம் மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் பக்தர்கள்.

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்

இன்று (நவம்பர் 17-ம் தேதி) வியாழக்கிழமை, கார்த்திகையின் பிறப்பு. இந்த முதல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், ஐயப்ப சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற ஐயப்பன் கோயிலிலோ விநாயகர் முதலான ஆலயங்களிலோ மாலை அணிந்து கொள்வார்கள் பக்தர்கள்.

கோவையில் சித்தாபுதூர் பகுதியில் அழகுற அமைந்திருக்கிறது ஐயப்பன் கோயில். இங்கே, கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், சபரிமலைக்கு மாலையணிந்து விரதம் மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்: விரதம் தொடங்கிய பெண்கள்

ஐயப்பன் கோயிலில், வழக்கத்தை விட இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதிகாலையில் இருந்தே, பக்தர்கள் சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோயிலுக்கு வந்து, அங்கே உள்ள ஆச்சார்யர்களின் திருக்கரங்களால், மாலையணிந்து கொண்டு விரதத்தைத் தொடங்கி, ஐயப்ப சுவாமியைத் தரிசித்துச் சென்றார்கள்.

ஜரூர் விற்பனையில் துளசிமாலைகள்

சிறுவர்கள் தொடங்கி வயதான பெரியவர்கள், மூத்த வயதுகொண்ட பெண்கள் என ஏராளமான பக்தர்கள், விரதத்தைத் தொடங்கினார்கள்.

x