வேட்டி அணிந்து வந்தவருக்கு அனுமதி மறுப்பு - பிரபல வணிக வளாகத்தை மூட அரசு உத்தரவு


பெங்களூரு: பெங்களூருவில் வேட்டி கட்டி வந்தவரை திரைப்படம் பார்க்க அனுமதிக்காத பிரபல அடுக்குமாடி வணிக வளாகத்தை 7 நாட்களுக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல ஜி.டி.மால் என்ற தனியார் அடுக்குமாடி வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்காக கடந்த ஜூலை 16ம் தேதி ஃபக்கீரப்பா என்ற விவசாயி தனது மகனுடன் வருகை தந்துள்ளார். வேட்டி மற்றும் சட்டை அணிந்து வணிக வளாகத்திற்குள் ஃபக்கீரப்பா நுழைய முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பணியாளர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஃபக்கீரப்பா விளக்கம் கேட்டபோது, வேட்டி அணிந்து வருபவர்களை மாலிற்குள் அனுமதிக்க முடியாது என அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதும் கன்னட அமைப்பினர் ஜி.டி.மால் முன்பாக நேற்று அதிரடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்டி மற்றும் லுங்கி அணிந்து, மாலிற்குள் நுழைந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்டி அணிந்து வருபவர்களை உள்ளே நுழைய மறுப்பது, தங்கள் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே வணிக வளாகத்தின் நிர்வாகிகள், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவித்ததோடு. ஃபகீரப்பாவை மாலையிட்டு வரவேற்று மாலிற்குள் அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஃபகீரப்பா, ”நான் படிக்கவில்லை. ஆனால் கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பது எனக்கு தெரியும். என்னுடைய 5 குழந்தைகளையும் நல்ல முறையில் படிக்க வைத்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல பொருளாதார நிலைமையில் இருந்து வருகின்றனர். ஆனால் அதற்காக என்னுடைய கலாச்சாரத்தையும், உடை உடுக்கும் சுதந்திரத்தையும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. வணிக வளாகத்தில் நுழைவதற்காக எனக்கு இதுவரை பழக்கம் இல்லாத கால் சட்டைகளை என்னால் அணிய முடியாது. ஒருவர் உடுத்தும் உடையைக் கொண்டு, கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை இழிவாக நினைப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் வணிக வளாக நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஜி.டி.மால் தனியார் வணிக வளாகத்தை 7 நாட்களுக்கு மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

x