15 வயதுக்கு மேற்பட்ட கல்வி கற்காதோருக்கு கல்வி வழங்கும் உல்லாஸ் திட்டம்: புதுச்சேரியில் முதல் கற்றல் மையம் திறப்பு


புதுச்சேரி: 100 சதவீதம் கல்வி அறிவுபெற்ற பிரதேசமாக மாற்ற, 15 வயதுக்கு மேற்பட்டுள்ள கல்விகற்காதோருக்கு கல்வி வழங்கும் உல்லாஸ் திட்டத்தின் முதல் கற்றல் மையத்தை புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.

உல்லாஸ் என்னும் புதிய பாரத கல்வி அறிவுத் திட்டம் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 15 வயதிற்கு மேற்பட்ட கல்வி கற்காதோருக்கு கல்வி அளித்து புதுச்சேரியை 100 சதவீத கல்வி அறிவுபெற்ற மாநிலமாக மாற்றும் இலக்குடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், சிறு வயதில் பள்ளிப் படிப்பைத் தவறவிட்ட பெரியவர்கள் சேர்ந்து கல்வி கற்கலாம். அந்தந்த ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளே இந்தத் திட்டத்தின் கற்றல் மையங்களாக செயல்படும். இத்திட்டத்தில் ஆசிரியர்களாக சேவையாற்ற விரும்பும் தன்னார்வலர்கள், அருகிலுள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை அணுகலாம்.

உல்லாஸ் திட்டத்தின் முதல் கற்றல் மையத் திறப்பு விழா காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று நடந்தது. புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உல்லாஸ் கற்றல் மையத்தை திறந்து வைத்து தன்னார்வ ஆசிரியருக்கு அடையாள அட்டையும், கற்போருக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், "நடப்பாண்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில், 10 ஆயிரம் பேருக்கு கணக்குத் தெரியவும், எழுதப் படிக்கவும், வங்கியில் கணக்கு வழக்கை பார்ப்பது, காசோலை செலுத்துவது, மொபைலில் பணம் அனுப்புவது, எடுப்பது உள்ளிட்டவற்றை கற்றுத் தரவுள்ளோம்.

நாட்டிலேயே முன்மாதிரியாக உல்லாஸ் பாடத்திட்டத்தை புதுச்சேரி மாநில எழுத்தறிவு மையம் இணையவழிக் கற்றல் பொருட்களாக உருவாக்கியுள்ளது. கல்வித்துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கென தனியாக புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, நாட்டு நடப்பை அறியவும், யாரும் நம்மை ஏமாற்றிவிடாமல் இருக்கவும் கல்வியறிவைப் பெற இத்திட்டம் உதவும்" என்றார்.

x