நீட் தேர்வு முறைகேடு: பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேரிடம் விசாரணை


பாட்னா: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் பிஹார் மாநிலம், பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்களிடம், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்வில் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் கசிவு, ஒரே பயிற்சி மையத்தில் தேர்வு எழுதியவர்கள் உள்பட 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது என நீட் தேர்வு குறித்து பெரும் முறைகேடு புகார்கள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில் பிஹார் மாநிலம், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ மாணவர்கள் 4 பேர், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த மாணவர்களுக்கு வினாத்தாளுக்கான விடைகளை இந்த 4 மாணவர்களும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 4 மாணவர்களையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த 2021, 2022ம் ஆண்டில் சேர்ந்த நான்கு மருத்துவ மாணவர்களின் அறைகளில் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர்.

மேலும் மாணவர்களின் மின்னணு சாதனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்” என்றார். எனினும், 4 மாணவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது குறித்து சிபிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

x