வயநாடு மாவட்டத்துக்கு 'ரெட் அலர்ட்': கேரளாவில் மழை பாதிப்புகளுக்கு 4 பேர் உயிரிழப்பு!


திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பலத்த மழை பாதிப்புகளால் நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களில் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஐ கடந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் மழை சார்ந்த நிகழ்வுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. திருவனந்தபுரம் மரியபுரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் அலோசியஸ் (45) உயிரிழந்தார்.

இடுக்கி மாங்குளத்தில் சனீஷ் ( 23) என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். ஆலப்புழாவில் மரம் முறிந்து விழுந்ததில் உனைஸ் (28) என்பவர் உயிரிழந்தார். தவிர, பாலக்காட்டில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

திருவனந்தபுரத்தில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். நிலச்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் தங்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

x