டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல்: பெங்களூரு மக்கள் பீதி


பெங்களூருவில் டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகளுக்கு மத்தியில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் டெங்குவால் 10,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் பெங்களூரில் தொற்று நோய்களும் பரவி வருகிறது.

ஏற்கெனவே கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மாநிலத்திலேயே ​​பெங்களூருவில்தான் டெங்கு பாதிப்பு அதிகம். இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறி வருகிறது. இந்த நிலையில் எலிகளால் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்குமாறு பெங்களூரு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எலிக்காய்ச்சல் என்பது எலியின் கழிவுகள், சிறுநீர், மலம் அல்லது அதன் உடல் திரவங்கள் மனித தோலுடன் தொடர்பு கொள்ளும் போது தொற்றால் பரவுகிறது. தலைவலி, கண் சிவத்தல், குமட்டல் அல்லது வாந்தி, கை வலி, முகத்தில் கொப்புளங்கள், அதிக காய்ச்சல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தொற்று ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறி கண்டறியப்பட்டால் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாந்தி மற்றும் முகத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்களைத் தூக்கி எறியாமல் வீட்டிலோ அல்லது கிடங்குகளிலோ தூய்மையைப் பேணுவதன் மூலமும், வெந்நீரைக் குடிப்பதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கே.சி. பொது மருத்துவமனையின் மருத்துவர் ரேகா கூறுகையில், "மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் அதிகரிக்கும். கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பருவமழையின் தொடக்கத்தில் எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்நிலையில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மருத்துவமனைகளில் தொடங்கியுள்ளன" என்றார்.

x