சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்!


சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய பைப் வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

சத்தீஷ்கார் மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வன்டொலி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் நேற்று வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதே போல சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்டிஎஃப், மாவட்ட ரிசர்வ் குழு (டிஆர்ஜி), கமாண்டோ பட்டாலியனின் கூட்டுக் குழு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களைப் பிடிக்க சிறப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவவீரர்கள் மண்டிமார்கா காடு வழியே திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நக்சலைட்டுகள் பைப் வெடிகுண்டு மூலம் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், மாநில அதிரடிப்படையின் தலைமைக் காவலர் பாரத் லால் சாஹு மற்றும் காவலர் சதர் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் புருஷோத்தம் நாக், கோமல் யாதவ், சியாராம் சோரி மற்றும் சஞ்சய் குமார் ஆகிய நான்கு வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

x