சிபிஐ கைதை எதிர்த்து கேஜ்ரிவால் மனு: தீர்ப்பை தள்ளிவைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்


புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் கேஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் டி.பி. சிங் கூறுகையில், ‘‘சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்த சிபிஐ-க்கு முழு சுதந்திரம் உள்ளது.டெல்லி முதல்வரை கைது செய்யும்போது அதற்கு சாத்தியமான காரணங்கள் சிபிஐ-யிடம் இருந்தது. விசாரணையின் நோக்கத்துக்காக ஒருவரை கைது செய்ய சிஆர்பிசி சட்டம் அனுமதிக்கிறது.

விசாரணையில் செல்வாக்கு செலுத்தவும், தடம் புரள வைக்கவும் கேஜ்ரிவாலுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க சிபிஐ-யிடம் போதுமான அளவுக்கு ஆதாரங்கள் உள்ளன.

விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது. எனவே, கேஜ்ரிவால் விடுவிக்கப்பட்டால் அவர் சாட்சிகளை கலைக்க செல்வாக்கு செலுத்துவார் என்ற நியாயமான அச்சம் சிபிஐ-க்கு உள்ளது. ஜாமீன் மனுவை பொருத்தவரையில் கேஜ்ரிவால் முதலில் விசாரணை நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும்’’ என்றார்.

கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கிவி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு கைதை எதிர்த்த மனு மீதான தீர்ப்பையும், ஜாமீன் மனு மீதான உத்தரவையும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது

x