`எனக்கு சென்னை பிடிக்கவில்லை'- கணவரை ஏமாற்றி பணம், நகையுடன் ஓட்டம் பிடித்த வெளிநாட்டு மனைவி


வீட்டில் இருந்த பணம் நகைகளை வெளிநாட்டு மனைவி திருடிச் சென்றதாக கணவன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சேர்ந்தவர் அப்துல் மாலிக் (52). இவர் கடந்த 2002-ம் ஆண்டு மொராக்கோ நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். அப்போது அந்நாட்டை சேர்ந்த EL ஹிலாலி ஹஸ்னா என்ற பெண்ணை காதலித்து அங்கேயே திருமணம் செய்து கொண்டார். பின்னர் சென்னை திரும்பிய இருவரும் சைதாப்பேட்டை சலவயலர் காலனி 3-வது தெருவில் ஒன்றாக வசித்து வந்தனர். சென்னை வந்த சிறிது நாட்களிலேயே ஹிலாலி ஹஸ்னாவுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே ஹிலாலி தன்னுடைய கணவரிடம் இருவரும் மொராக்கோ சென்று ஒன்றாக வாழலாம் என கூறியுள்ளார். அதற்கு அப்துல் மாலிக் சென்னையிலேயே வாழலாம் என்று கூறினார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்துல் மாலிக் வேலை நிமித்தமாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மனைவியைக் காணவில்லை. மேலும் வீட்டில் வெளிநாட்டுப் பணம் 6000 யூரோ, 60 ஆயிரம் இந்திய பணம், 10 சவரன் நகைகள், மனைவியின் பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனையடுத்து அப்துல்மாலிக் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த தனது மனைவி வெளிநாட்டுப் பணம் 6000 யூரோ, இந்தியப்பணம் ரூ.60 ஆயிரம், 10 சவரன் நகைகள், மற்றும் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்று விட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x