சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்துவதா? - புதுச்சேரி அரசுக்கு காங்கிரஸ் எம்.பி கேள்வி


புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் அமல்படுத்தியுள்ளதால் மாணவர்கள் அவதியுற்று வருவதாக புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவரும், எம்.பி-யுமான வைத்திலிங்கம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “புதுவை மாநிலத்தில் அவசர கோலத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இந்த பாடத்திட்டத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் இன்னும் தயாராகவில்லை. ஆசிரியர் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளனர். சில இடங்களில் பள்ளி வகுப்புகள் மூடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பள்ளிகளை மூடியுள்ளனர்.” என்றார்.

மேலும், ”இதன்மூலம் மாணவர்களை தவறான பாதைக்கு அரசே தள்ளியுள்ளது. அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். நாங்கள் ஆய்வு செய்ததில், மொத்தம் 6 அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் மூடப்படட்டுள்ளன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரிவுரையாளர்களை தேர்வு செய்ய உள்ளனர், இதற்கு வயது தளர்வு அளிக்க வேண்டும். மத்திய தேர்வாணையத்திற்கு எங்களின் கருத்தை ஆலோசனையாக தெரிவிக்கிறோம். இது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என கூறியுள்ளது. எனவே, புதுவை அரசுப் பள்ளி விரிவுரையாளர் தேர்வின்போது 3 அல்லது 4 ஆண்டு வயது தளர்வு அளிக்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ புதுச்சேரியில் சிறுபான்மை மக்களுக்கான வஃக்பு வாரியம் செயல்படாமல் உள்ளது. சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்படவில்லை. இதனால் சிறுபான்மையினர் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியவில்லை. வஃக்பு வாரியத்துக்கு நிர்வாகிகளை நியமித்து செயல்படுத்த வேண்டும். ஒரு மாதத்துக்குள் இதை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். சட்டப்பேரவையையே கூட்ட முன்வராத முதல்வர் ரங்கசாமி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவாரா? கர்நாடக காங்கிரஸ் அரசை காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி கடிதம் எழுத உள்ளேன்” என்றார்.

x