காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழப்பு


புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

காஷ்மீரின் நக்ரோட்டா கன்டோன்மென்ட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவு. ராணுவத்தின் ஓர் அங்கமான இதன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தரிகோட் உரார்பகி பகுதியில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்திய ராணுவம், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ், ஜம்மு காஷ்மீர் போலீஸ் சிறப்புக் குழுவினர் அடங்கிய கூட்டுப் படை திங்கள்கிழமை இரவு சம்பவ இடத்துக்குச் சென்று சுற்றிவளைத்தது. சரணடையுமாறு தீவிரவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மறைந்திருந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த 5 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஓர் அதிகாரி உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, கூடுதல் படை வீரர்கள் அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்” என பதிவிடப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீர் என்கவுன்ட்டர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி திவேதி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 3 வாரத்தில் 3-வது முறையாக தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

பாஜகவின் தவறான கொள்கை: இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நேற்று கூறியதாவது. காஷ்மீரில் இன்று (நேற்று) நடந்த மேலும் ஒரு துப்பாக்கிச் சண்டையில் நமது வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வீரமரணம் அடைந்த அவர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீரில் இதுபோன்ற கொடூர சம்பவம் அடுத்தடுத்து நடைபெறுவது வருத்தமளிக்கிறது.

தொடர் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள், காஷ்மீர் நிலைமை மோசமாக இருப்பதையே உணர்த்துகிறது. பாஜகவின் தவறான கொள்கைகளால் நமது ராணுவ வீரர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் நாட்டுக்கும் ராணுவ வீரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனும் விரும்புகிறான். இந்த துயரமான நேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக இந்த நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x