வெயிட்டிங் டிக்கெட்டோடு ரயிலில் பயணம் செய்தால் அபராதம் - விதிகளை கடுமையாக்கிய ரயில்வே!


சென்னை: இந்திய ரயில்வேயின் புதிய விதிகளின்படி வெயிட்டிங் டிக்கெட்டுடன் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படுவதுடன், அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் வெயிட்டிங் டிக்கெட் அல்லது சாதாரண டிக்கெட்டை வைத்துக்கொண்டு பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததால், ஏற்கனவே முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவானதால் ரயில்வே இப்போது இது தொடர்பான விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி ரயில்களில் வெயிட்டிங் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு கடுமையான விதிகளை அமல்படுத்துவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, காத்திருப்பு டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கினாலும் அல்லது கவுண்டரில் இருந்து வாங்கினாலும், வெயிட்டிங் டிக்கெட்டுகளுடன் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி அபராதம் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நெரிசலை குறைப்பதையும், உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மிகவும் வசதியான பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி இனி, காத்திருப்புப் பயணச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ஏசி பெட்டிகளில் பயணம் செய்வது கண்டறியப்பட்டால், ரூ.440 அபராதமும், அடுத்த ஸ்டேஷனுக்கான கட்டணமும் செலுத்த வேண்டும். ஸ்லீப்பர் கோச்சில் காத்திருப்பு டிக்கெட்டில் பயணம் செய்தால், அடுத்த ரயில் நிலையத்திற்கு செல்லும் கட்டணத்துடன் 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் இவ்வாறு பயணம் செய்பவர்களை அடுத்த ஸ்டேஷனில் ரயிலில் இருந்து இறங்கச் செய்யலாம் என்றும் ரயில்வே தனது உத்தரவில் கூறியுள்ளது.

x