மின்விசிறி, வெளிச்சம், உணவு இல்லை: 2 நாட்களாக மருத்துவமனை லிஃப்டில் சிக்கித் தவித்தவர் மீட்பு


திருவனந்தபுரம்: அரசு மருத்துவக் கல்லூரி லிஃப்டில் மின்விசிறி, விளக்கு இல்லாமல் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த எம்எல்ஏ விடுதி ஊழியர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவராக உள்ளவர் ரவீந்திரன்(59). இவர் எம்எல்ஏ விடுதி ஊழியராக பணியாற்றி வந்தார். முதுகுவலி சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரவீந்திரன் சென்றார். அங்கு எக்ஸ்ரே எடுத்த பிறகு அதை மருத்துவரிடம் கொடுப்பதற்காக லிஃப்ட்டில் சென்று கொண்டிருந்தது போது திடீரென நின்று விட்டது. பின்னர் தனது செல்போனைப் பயன்படுத்தி லிஃப்டில் எழுதப்பட்ட ஹெல்ப்லைன் எண்களை ரவீந்திரன் அழைத்தார்.

ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. சுமார் 42 மணி நேரமாக அவர் லிஃப்ட்டுக்குள் சிக்கித் தவித்தார். இந்த நிலையில் அவரது செல்போன் கீழே விழுந்து சேதமடைந்தது. பிறகு லிஃப்ட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார். யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தார்.

அவசர நேரத்தில் லிஃப்ட்டின் ஒரு மூலையில் சிறுநீர் கழித்தார். தாகத்தினாலும் பசியினாலும் அவரால் தூங்கக்கூட முடியவில்லை. தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தார். லிஃப்ட்டிற்குள் மின்விசிறியோ, விளக்குகளோ இல்லை. காற்று உள்ளே வந்ததால் அவரது உயிர் தப்பியது. இறுதியில், மன உறுதியை நிலைநிறுத்த, அவர் மனைவி எழுதி வெளியிட்ட கவிதைகளை நினைவு கூர்ந்தார்.

ரவீந்திரன் அடிக்கடி வீட்டுக்கு வருவதில்லை. ஆனால், அவர் ஞாயிறன்று வீட்டுக்கு வருவார். ஆனால், அன்று அவர் வீட்டுக்குச் செல்லவில்லை.. இதனால் அவரது மனைவி, ரவீந்திரனின் செல்போனுக்கு போன் செய்தார். ஆனால், பதில் இல்லை. இதனால் அவரரது மனைவி, எம்எல்ஏ விடுதிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கும் போன் செய்தபோது, ​​சனிக்கிழமை மதியம் முதல் ரவீந்திரனை காணவில்லை எனத் தெரியவந்தது.

இதனால் பயந்து போன அவரது மனைவி, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார், போலீஸார் அவரைத் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை, லிஃப்ட் ஆபரேட்டர் பணிக்கு வந்தபோது தான் ​​ரவீந்திரன் லிஃப்டில் சிக்கியது தெரிய வந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதுடன், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது. 48 மணி நேரமாக லிஃப்டிற்குள் எம்எல்ஏ விடுதி ஊழியர் சிக்கித் தவித்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x