ஷம்பு எல்லையில் தடுப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு: டெல்லி பேரணிக்கு மீண்டும் ஆயத்தமாகும் விவசாயிகள்


சண்டிகர்: ஹரியாணா மற்றும் பஞ்சாப் எல்லையான ஷம்பு பகுதியில் சாலைத் தடைகளை அகற்ற ஹரியாணா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து டெல்லி நோக்கிய பேரணிக்கு விவசாயிகள் மீண்டும் ஆயத்தமாகி வருகின்றனர்.

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லி நோக்கிய பேரணியை துவங்கிய விவசாயிகள், பஞ்சாப் மற்றும் ஹரியாணா எல்லையான ஷம்புவில், போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அங்கு சாலை நடுவே கான்கிரீட் தடுப்புகள் முள் வேலிகள், பள்ளங்கள் என விவசாயிகள் பேரணியை தடுத்து நிறுத்த பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் ஷம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருந்து தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது.

இவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தது. இதற்கிடையே மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இச்சூழலில், தற்போது ஷம்பு எல்லையில் உள்ள தடுப்புகளை அகற்றுமாறு மாநில அரசுக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை நடுவே உள்ள தடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஹரியாணா அரசு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எனினும் ஹரியாணா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மீண்டும் டெல்லி நோக்கிய பேரணியை துவக்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் ஏக்தா சித்துபூர் தலைவர் ஜக்ஜீத் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் அல்லது ராம்லீலா மைதானத்தில் அமைதியான போராட்டத்தைத் தொடருவோம். எங்கள் பேரணியை மீண்டும் தடுத்து நிறுத்தி சாலையை மறித்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாளை அம்பாலாவில் அமைதியான போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

x