பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு


டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக கிளம்பிச் சென்றார். குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் அங்கு மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளை தேர்வு சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ’மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் - ஆளுநர் ரவி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை சந்தித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மனு அளித்திருந்தனர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திலும் சிபிஐ விசாரணை வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x