கர்நாடகாவில் கனமழையால் நிலச்சரிவு: சேற்றில் புதைந்த 9 பேரின் நிலை என்ன?


உத்தர கன்னடா: கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட நிலச்சரிவால் மலை சரிந்து விழுந்ததில் 9 பேர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் அங்கோலா தாலுகா ஷிரூர் அருகே திடீரென இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மலை இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் சேற்றில் புதைந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமண நாயக், சாந்தி நாயக், ரோஷன், அவந்திகா, ஜெகநாத் உள்ளிட்ட 9 பேர் சேற்றில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் என்டிஆர்எஃப் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை 66-க்கு அருகில் ஒரு டேங்கர் ஓட்டுநரும், கிளீனரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கனமழை காரணமாக பெரிய மலை இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக காஸ் டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் சேற்றில் சிக்கினர். அவர்கள் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், நெடுஞ்சாலையில் உள்ள சேற்றை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது.

கனமழை காரணமாக கும்தா தாலுகாவின் ஹெக்டே கிராமம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அபாய அளவைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் அகநாசினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஹெக்டே கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

x