ஒரே நாளில் 173 ஊழியர்கள் திடீரென பணிநீக்கம்: பைஜூஸ் நிறுவனம் குறித்து அமைச்சரிடம் புகார்


அமைச்சரிடம் மனு

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் பைஜூஸ் நிறுவனத்தின் கிளையில் இருந்து ஒரேநாளில் 173 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வேலையை இழந்த ஊழியர்கள் கேரள தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டியை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.

மென்பொருளில் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுக்கும் மென்பொருள் நிறுவனமான பைஜூஸ், கடந்த 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனம் அண்மைக்காலமாக தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு இந்நிறுவனம் 232 கோடி நஷ்டம் அடைந்தது. கடந்த 2021-ம் ஆண்டு 4588 கோடி ரூபாய் இந்நிறுவனத்தின் நஷ்டம் உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதே காரணத்தைக் கூறி பைஜூஸ் திருவனந்தபுரம் கிளையில் பணிசெய்த 173 ஊழியர்களை ஒரேநாளில் பணி நீக்கம் செய்தது. இதில் எவ்விதமான தொழிலாளர் சட்டத்தையும் பின்பற்ற்வில்லை என பைஜூஸ் நிறுவன ஊழியர்கள் கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டியை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளனர். கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேலை இழந்த ஊழியர்கள் கூறுகையில், “பைஜூஸ் நிறுவனத்தில் மொத்தம் 50 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்கிறோம். அதில் 2500 பேரை நீக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது. பைஜூஸ் நஷ்டத்தில் செல்வதாகக் கணக்குச் சொல்கிறார்கள். ஆனால் பைஜூஸ் நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 22 பில்லியன் டாலர். வேலையை விட்டு திடீரென ஒரு ஊழியரை நீக்கும்போது, மூன்றுமாத சம்பளத்தைத் தரவேண்டும். அதைத் தரவில்லை. அதேபோல் அக்டோபர் மாதத்தின் முக்கால்வாசி நாள்கள் வேலை செய்த சம்பளமும் தரவில்லை. விடுப்புச் சம்பளம், பணிக்கொடை உள்ளிட்ட எந்தவித பணப்பலன்களும் இல்லாமல் கொத்தடிமைகளைப் போல் விரட்டியுள்ளனர் ”என்றனர்.

கேரளத்தில் பைஜூஸ் நிறுவனம் செயல்பட்டுவரும் டெக்னோ பார்க் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கான தொழிலாளர் அமைப்பும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது.

x