'மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு பதிலாக பஞ்சர் ஒட்டும் கடை திறக்க வேண்டும்’: பாஜக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு!


போபால்: மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி திறப்பு விழாவில், மாணவர்கள் பட்டம் பெறுவதற்கு பதிலாக பஞ்சர் ஒட்டும் கடைகளை திறக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் 'பிஎம் காலேஜ் ஆஃப் எக்ஸலன்ஸ்' என்ற பெயரில் கல்லூரிகள் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தூரில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்லூரியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மத்தியப் பிரதேசம் ஒரு முக்கியமான அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. கல்வியின் நோக்கம் மாணவரின் அனைத்து பலங்களையும் வெளிப்படுத்துவதும், அவர்களுக்கு ஒரு தளத்தையும், வளர ஒரு வாய்ப்பையும் வழங்குவது ஆகும்” என்றார்.

இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குணாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தத் தொகுதி பாஜக எம்எல்ஏ பன்னாலால் ஷக்யா பேசுகையில், “இன்று 'பிஎம் காலேஜ் ஆஃப் எக்ஸலன்ஸ்'-ஐ திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்ற ஒரு வாக்கியத்தை மனதில் வைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடையைத் திறந்தால் குறைந்தபட்சம் வாழ்வாதாரத்துக்காகவாவது சம்பாதிக்க முடியும்" என்றார். அதே நாளில் இந்தூரில் நடைபெற்ற மாபெரும் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திலும் எம்எல்ஏ பன்னாலால் ஷக்யா கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசுகையில் "மக்கள் மரங்களை நடுகிறார்கள். ஆனால் தண்ணீர் ஊற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை" என்றார். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. எனினும், பட்டம் பெறுவதை காட்டிலும் மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடையை திறக்க வேண்டும் என எம்எல்ஏ பன்னாலால் ஷக்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

x