கர்நாடகாவில் கனமழை: பேருந்து நிலையம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் முடிகெரெ தாலுகா கொட்டிகெஹரா பேருந்து நிலையம் இடிந்து விழுந்துள்ளது. அத்துடன் கர்நாடகாவில் இன்று பல பகுதிகளில் அதி கனமழைக்க வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் சிக்கமகளூருவில் உள்ள முடிகெரே தாலுகா கொட்டிகெஹரா பேருந்து நிலையம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அத்துடன் பேருந்து நிலையம் முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. அத்துடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் இருளில் தவித்தனர். திடீரென சுவர்கள் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கனமழை காரணமாக துங்கா ஆறு அபாய அளவைத் தாண்டியதால் சிருங்கேரி நகரில் உள்ள காந்தி மைதானத்தில் தண்ணீர் புகுந்தது. சிருங்கேரியை அடுத்த இணைச்சாலை முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதால், சிருங்கேரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சிக்கமகளூருவில் உள்ள ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூரு, கலசா, சிருங்கேரி, கொப்பா, என்.ஆர்.புரா, முடிகெரே ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மீனா நாகராஜ் விடுமுறை அறிவித்துள்ளார்.

கனமழை காரணமாக ஷிமோகா மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குருதத்தா ஹெக்டே உத்தரவிட்டுள்ளார். கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டு ஷிமோகா மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி கார்வார் மாவட்டத்தில் ஜூலை 18-ம் தேதி வரை ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

x