ம.பி மருத்துவர் மருந்து சீட்டில் `ஸ்ரீஹரி’‍- வைரலாகும் டாக்டர் ஆசிப் அலியின் பரிந்துரை!


மத்தியப்பிரதேச மருத்துவரான ஆசிப் அலி, `ஸ்ரீஹரி’ என எழுதி மருந்திற்கானப் பரிந்துரை சீட்டு அளித்துள்ளார். ஆங்கிலத்திலும் சேர்த்து இனி இந்தி மொழியிலும் எழுத பாஜக அரசு அளித்த அறிவுறுத்தல் வைரலாகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மபி மாநிலத்தின் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவக்கல்வி, இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான சில பாடநூல்களை கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டிருந்தார். அனாடமி, மெடிக்கல் பிஸியாலஜி மற்றும் மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி ஆகிய இந்நூல்களின் பெயர்கள், இந்தியில் மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக, ஆங்கில அர்த்தத்தையே இந்தியில் எழுதப்பட்டிருந்தன. இது நாடு முழுவதிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அடுத்து, மபி மாநில மருத்துவக்கல்வித்துறை அமைச்சரான சாரங்கி வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பும் சர்ச்சைக்குள்ளானது. இதில் அவர், தீபாவளி பண்டிகையின் முதல் நாளில் வரும் தந்தேரஸ் அன்று அனைத்து மருத்துவக்கல்லூரிகளில் இந்துக்களின் மருத்துவக்கடவுளான தன்வந்திரி படத்தை மாட்டி பூசித்து வணங்க வேண்டினார். இதை கிண்டலடிக்கும் விதத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், உயிர்களை பறிக்கும் எமதர்மராஜனையும் அதேநாளில் போற்ற வலியுறுத்தினர். இச்சர்ச்சை பட்டியலில் மேலும் ஒரு விவகாரம் இணைந்தது.

டாக்டர் ஆசிப் அலி

இதில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து சீட்டில் முதலாவதாக எழுதும், ‘ஆர்எக்ஸ்’ என்ற ஆங்கில சுருக்கத்திற்கும் முன்பாக, ‘ஸ்ரீஹரி’ என இந்திமொழியில் எழுதவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மபியின் பாஜக அரசு உத்தரவை சத்னா மாவட்டத்தின் கோடார் மருத்துவ மையத்தின் மருத்துவரான டாக்டர்.சர்வேஷ்சிங் எழுதியிருந்தார். இதையடுத்து, போபாலின் அரசு மருத்துவர் குருதத் திவாரியும் ஸ்ரீஹரியை எழுதி மருந்துகளை பரிந்துரைத்தார். தொடர்ந்து சாகர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் ஆசிப் அலியும், ஸ்ரீஹரி எழுதி மருந்துகளை இந்திமொழியில் பரிந்துரைத்தார். இந்த மருந்து சீட்டுகளின் படங்கள், சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.

எந்த துறையிலும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்களும், அறிவியல் முன்னேற்றங்களும் மருத்துவத்துறையில் அதிகம். இதன் மீதான ஆய்வுக்கட்டுரைகளும், நூல்களும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகம் வெளியாகின்றன. ஆங்கிலத்தில் வெளியாகும் இவற்றை இந்தி மொழி அறிவால் படிக்க இயலாது எனக் கருதப்படுகிறது.

மேலும், இந்தி மொழிக்கான எம்பிபிஎஸ் பட்டத்தின் சான்றிதழ் பொதுவாக அளிக்கப்படுகிறதா? இல்லை அது இந்தி மொழியில் கற்றது என்பதையும் குறிப்பிடப்படுமா? எனத் தெரியவில்லை. ஒருவேளை எம்பிபிஎஸ் (இந்தி) எனக் குறிப்பிட்டால் அச்சான்றிதழ் அடிப்படையில் உயர்கல்விக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

x