புதிய போக்குவரத்து அபராத விதிமுறைகள், அக். 28-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
சென்னையில் நிரந்தரப் போக்குவரத்து மேம்பாடு, சி.எம்.ஆர்.எல் மற்றும் மழை நீர் வடிகால் வாரியம், திடீர் என நடைபெறும் போராட்டம் ஆகியவற்றால் பல நேரங்களில் குறிப்பிட்ட சாலையை ஒருவழி அல்லது இரு வழிகளையும் மூட வேண்டியுள்ளது. மூடப்பட்டுள்ள இந்த சாலைகளின் விவரங்களை ’கூகுள் மேப்’ உடனடியாக காட்டுவதில்லை.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதை அறிந்து லெப்டன் நிறுவனத்துடன் இணைந்து போக்குவரத்து காவல்துறை குறிப்பிட்ட சாலையை மூடுவது மற்றும் அதன் கால அளவு குறித்து 15 நிமிடங்களுக்குள் தெரிவிக்கும் வகையில் ’road ease’ செயலி ஒன்றை தயார் செய்துள்ளனர்.
இந்தச் செயலி மூலமாக கூகுள் மேப்பில் புள்ளியிடப்பட்ட சிறப்பு கோட்டுடன் மூடப்பட்ட சாலைகளை காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 'road ease' என்ற செயலியை இன்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் 'road ease' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். சென்னையில் மழைநீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்றுப் பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்துள்ளோம்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய போக்குவரத்து அபராதத் தொகையை சென்னையில் கொண்டு வரும் படி தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை சார்பில் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி புதிய அபராத விதி அக்.28-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், " புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாயும், ’ஸ்டாப் லைன்’ தாண்டினால் 500 முதல் 1500 ரூபாயும், ’ஃபுட் போர்டு’ விதிமீறலுக்கு 500 ரூபாய் முதல் 1500 ரூபாயும், மொபைல் போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் 1000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும். மேலும் பைக் ரேஸிங்,சாகசம் முதலான விதிமீறலில் ஈடுபட்டால் 15ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாயும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்" என தெரிவித்தார்.
"புதிய அபராதத் தொகையைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறையினர் லஞ்சம் வாங்கினால் பொதுமக்கள் சமூக வலைதளம் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ வந்து புகார் அளிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
"தீபாவளியின்போது அரசு கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் 848 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி தி நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை முதலான பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம். வாட்ச் டவர், பாடி வோர்ன் கேமிரா, 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை 338 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.