ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலி


டோடா: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் நேற்று இரவு ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் சுற்றித் திரிவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் படை பிரிவினர் இணைந்து தாரி கோட்டே அருகே உள்ள தேசா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டோடா நகரில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பகுதியில் இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

இரவு 9 மணி அளவில் திடீரென வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனிடையே இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை வரை தொடர்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து இந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ராணுவத்தினர் வளவளக்கப்பட்டு தற்போது வந்த பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

x