சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 1 கிலோ எடையுள்ள தங்கக்காசைத் திருடிய நேபாள வாலிபர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பரசு தெருவில் வசிப்பவர் சாய் வெங்கட்பிரசாத் (49). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சாய் வெங்கட் வீட்டில் கடந்த 15 வருடங்களாக நேபாளத்தை சேர்ந்த ராமு, சங்கர் ஆகிய இருவர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சாய் வெங்கட் தனது குடும்பத்துடன் இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வேலைக்காரர்கள் ராமு, சங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 24 -ம் தேதி சாய்வெங்கட்டுக்கு கூரியர் ஒன்று வந்துள்ளது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உடனே கூரியர் ஊழியர் சாய் வெங்கட்டை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
உடனே சாய் தனது வீட்டில் வேலை செய்து வந்த ராமு, சங்கர் ஆகிய இருவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சாய் தனது கார் ஓட்டுநர் லோகேஷை தொடர்பு கொண்டு கேட்டபோது ராமு, சங்கர் இருவரும் வீட்டில் இருந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இத்தாலியில் இருந்து சென்னை திரும்பிய சாய் வெங்கட்பிரசாத் வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ஆயிரம் கிராம் எடையுள்ள (ஒரு கிலோ) தங்கக் காசுகள் திருடு போனது தெரியவந்தது. பின்னர் தங்கக் காசுகளை திருடிச் சென்ற வேலைக்காரர்கள் ராமு, சங்கர் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நேபாள நாட்டு வாலிபர்களை தேடிவருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த கருண்(35) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.