பாதாள சாக்கடை திட்ட குளறுபடிகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் - புதுச்சேரி திமுக அறிவிப்பு!


புதுச்சேரி: பாதாள சாக்கடை திட்ட குளறுபடிக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டத்தில் இறங்கவுள்ளதாக புதுச்சேரி திமுக எச்சரித்துள்ளது

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட புதுநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதி மக்களுடன் இன்று பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘புதுச்சேரி மாநிலம், உழவர்கரை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் நச்சுக்கழிவு வாயு வெளியேறுவதற்கு தனியாக பைப்லைன் அமைக்காத காரணத்தால் கடந்த மாதம் நச்சுக்கழிவு வாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.

அதன் பிறகாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டு, நச்சுக்கழிவு வெளியேறுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை சரிசெய்திருக்க வேண்டும். ஆனால், கண்துடைப்புக்கு கடந்த ஒரு மாதமாக ஆய்வு என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து மக்களின் வரிப் பணத்தை வீண் செய்திருப்பது தான் உண்மை.

புதுச்சேரியில் பாதாள சாக்கடைத் திட்டம் சரியாக இல்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் அரசும், அதிகாரிகளும் அதை காதில் வாங்குவதில்லை. அதன் விளைவு மூன்று உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் கடந்தும் இன்னும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக மீண்டும் அப்பகுதியில் நச்சுக்கழிவு வாயு வெளியேறுவதாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஏதோ ஒரு நகரின் பிரச்சினையாக பார்க்காமல் புதுச்சேரி முழுமைக்குமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அரசுத் துறைகள் முடிக்கிவிடப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட புதுநகர், செல்லம்பாபு நகர், கம்பன் நகர், ஜெயா நகர், மூகாம்பிகை நகர், கல்யாணசுந்தரம் நகர், சூடாம்பிகை நகர், நண்பர்கள் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொது சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு ஏற்றார்போல் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை வல்லுநர் குழு அமைத்து துரிதமாக ஆய்வு நடத்தி அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தங்கள் துறை அலட்சியமாக இருக்கும் பட்சத்தில் திமுக போராட்ட களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறோம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமைப் பொறியாளர் தீனதயாளன், இப்பிரச்சினை சம்பந்தமாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி முதல் கட்டமாக ரூ. 2.25 கோடி மதிப்பில் நச்சுக்கழிவு வாயு வெளியேறுவதை தடுக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திய அனுபவம் தமக்கு இருப்பதாகவும், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், புதுநகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதாள சாக்கடையில் ஏதேனும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

x