பிரபல 5 யூடியூப் சேனல்கள் முடக்கம்?: உரிமையாளர்களுக்கு போலீஸ் சம்மன்


ரோஹித்

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பெண்களைத் துன்புறுத்தும் வகையிலும் ’பிராங்க்’ வீடியோக்களை எடுத்து சிலர் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய யூடியூப் சேனல்களை முடக்கக்கோரி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி ரோஹித்குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்று ரோஹித்தை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்த பின்பு ரோஹித் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சாலையில் பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் 5 யூடியூப் சேனல்கள் ’பிராங்க்’ வீடியோக்கள் எடுத்து அதை பதிவிட்டு சம்பாதித்து வருகின்றன. இந்தச் சேனல்களை முடக்கக்கோரி கொடுத்த புகாரின் பேரில் இன்று விசாரணைக்கு ஆஜரானேன். மேலும் குற்றம் சாட்டப்பட்ட 5 யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களை வரும் 20-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்" என்றார்.

மேலும்," யூடியூப் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு பல்வேறு எண்களில் இருந்து தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும், அதில் பேசிய நபர்கள் ' அனைவரும் அமைதியாக இருக்கும்போது, உனக்கும் மட்டும் என்ன' எனக் கூறி மிரட்டுகின்றனர். மேலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் முதியவர்களை அச்சுறுத்தும் வகையில் ’பிராங்க் வீடியோக்கள்’ எடுத்து அதை வெளியிடுவதை சம்பந்தப்பட்ட யூடியூபர்கள் கைவிட வேண்டும் என்றார்.

x