மாணவியின் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் இளைஞரை 24 மணி நேரம் கண்காணிக்கும் போலீஸ்: என்ன காரணம்?


சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ்

மாணவி சத்யா கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி தனியார் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளி சதீஷை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். பின்னர், நேற்று (14-ம் தேதி) மாலை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சத்யா

குறிப்பாக கொலையாளி சதீஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது மாணவி சத்யா தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் அவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் வந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதேபோல நீதிமன்றத்துக்கு முகத்தை மூடி அழைத்து வரப்பட்ட சதீஷை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சூழ்ந்து முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றக்கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சதீஷ்

இச்சம்பவங்களின் அடிப்படையில் சிறையில் கைதி சதீஷ் தற்கொலைக்கு முயற்சிக்கும் வகையில் எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் தடுக்கவும், பிற கைதிகள் மூலம் அவருக்கு எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாதபடியும் விசாரணைக் கைதியான சதீஷுக்கு சிறையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட சம்பவம் எதிரொலியாக போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதி சதீஷை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x