போலீஸாரின் அலட்சியத்தால் சிதைந்து போன காவலரின் குடும்பம்: கல்லூரி மாணவி கொலையில் அதிர்ச்சித் தகவல்


மாணவி சத்யா

இளைஞர் சதீஷ் மீது பலமுறை புகார் கொடுத்தும் போலீஸார் முறையான நடவடிக்கை எடுக்காததால் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளிக் கொலை செய்யும் அளவுக்கு விபரீதம் நடந்திருக்கிறது என சத்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று (அக்டோபர் 13-ம் தேதி வியாழக்கிழமை) கல்லூரி மாணவி சத்யாவை, சதீஷ் என்ற வாலிபர் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் லொகேஷனை வைத்து துரைப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த சதீஷை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். கைதான சதீஷ் மற்றும் கொலையான சத்யா இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

சத்யாவின் தந்தை மாணிக்கம் சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராகவும், தாய் ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் இன்னொரு மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக சத்யா, சதீஷ் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் சத்யாவின் வீட்டுக்குத் தெரியவர அவரது தாய் ராமலட்சுமி கேட்டுக்கொண்டதின் பேரில் சதீஷுடனான காதலை முறித்துக் கொண்டார் சத்யா. கடந்த 7 மாதங்களாக சதீஷிடம் பேசாமல் இருந்துள்ளார்.

சதீஷ்

இதனையடுத்து சதீஷ் பலமுறை சத்யாவிடம் பேச முற்பட்டபோது சத்யா தவிர்த்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த வாரம் உறவினர் ராகுலுடன் சத்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் நேற்று கல்லூரிக்குச் செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு மூன்று முறை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தும், போலீஸார் முறையான நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததன் விளைவாக தற்போது காவலரின் குடும்பமே சிதைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2 மாதங்களாக சத்யாவிற்கும் சதீஷிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தி.நகரில் சத்யா படிக்கும் கல்லூரிக்குச் சென்ற சதீஷ், கையைப் பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அப்போது புகார் அளிக்கப்பட்டது. மாம்பலம் போலீஸார் சதீஷைப் பிடித்து சாதாரண வழக்குப்பதிவு (75) செய்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

அதேபோல் குடித்து விட்டு வந்த சதீஷ் சத்யாவின் குடும்பத்தினருடன் சண்டையிட்ட போதும் போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுபோல் 3 முறை சத்யாவிடம் வம்பிழுத்த வழக்கில் சதீஷ் காவல் நிலையம் வரை சென்றபோது இரு குடும்பத்தாரையும் காவல்துறையினர் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது..

அதனைத் தொடர்ந்து நேற்று சதீஷ் ரயில் நிலையத்திற்கு சென்று சத்யாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்தது. இப்படி பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் முறையான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் இன்று காவலரின் குடும்பம் மகளைப் பறிகொடுத்துவிட்டு, கவலையிலும் துக்கத்திலும் இருக்கிறது என உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

x