நண்பர்கள் கண் முன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்: பதற வைக்கும் வீடியோ


மகாராஷ்டிராவில் நண்பர்கள் கண்முன்பு இளைஞர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டங்களில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ரத்னகிரியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் ராய்காட், சிந்துதுர்கா, புனே, சதாரா, கோலாப்பூர், பர்பானி, ஹிங்கோலி, அமராவதி, வார்தா மற்றும் யவத்மால் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மும்பை, தானே, பால்கர் மற்றும் துலே ஆகிய இடங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரத்தினகிரியில் ஆற்று நீரில் இளைஞர் ஒருவர், நண்பர்கள் கண்முன்பு அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்ற போதும், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர், ஆற்றில் இளைஞரைத் தேடும் பணியைத் தொடக்கியுள்ளனர். விசாரணையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஜெயேஷ் ஆம்ப்ரே என்பது தெரிய வந்துள்ளது. தற்போது கொங்கனில் கனமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு காரணமாக பல வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆற்றில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

x