கேரளத்தை உலுக்கிய நரபலி விவகாரத்தில் பாலியல் சித்ரவதை செய்ததும் அம்பலம்!


கேரளத்தில் இருபெண்களை நரபலி கொடுத்த விவகாரத்தில் தொடர்ந்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில் மூளையாகச் செயல்பட்ட ஷாபி என்கிற முகமது ஷாபி அந்தப் பெண்களை பாலியல் சித்ரவதை செய்து, நரபலி கொடுத்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடவந்தறா பகுதியில் தனியாக வசித்துவந்த, சாலையோர லாட்டரி சீட்டு விற்பனையாளரான ரோஸ்லி(59) என்ற பெண் திடீரென காணாமல் போனார். கடந்த ஆகஸ்ட் மாதமே இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணும் திடீரென காணாமல் போனார். பத்மா எர்ணாகுளத்தில் தங்கியிருந்து கேரள லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்தார். அவரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டபோது அலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகவே ஒலிக்க, கொச்சின் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இரு பெண்கள் மாயமானதும் ஒரேபாணியில் இருந்ததாலும், இருவருமே உடன் யாரும் இல்லாமல் தனிமையில் லாட்டரி சீட்டு விற்று பிழைப்பு நடத்தும் பெண்கள் என்பதும் இதன் பின்னால் ஏதும் பெரியசதி இருக்குமோ என கேரள காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் பத்மாவின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தனர். இதில் அவரது செல்போன் சிக்னல் கடைசியாக திருவல்லா பகுதியில் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் ஷிகாப் என்பவருடன் பத்மா செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஷிகாப்பை விசாரித்தபோதுதான் ஷாஜி என்கின்ற முகமது ஷிகாப் அவர்களை பகவல்சிங் வீட்டிற்கு அழைத்துப்போனதும், லைலா, பகவல் சிங், ஷிகாப் மூவரும் சேர்ந்து நரபலி கொடுத்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் ஷிகாப் குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவல் அவர்களை இன்னும் அதிர்ச்சியூட்டியது. ”ஷிகாப் ஆறாம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பின்னரே வீட்டை விட்டு வெளியேறி கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வாழ்ந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு அனைத்து தரப்பு மக்களுடனும் பழக்கம் ஏற்பட்டது. சைக்கோவைப் போல் மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவான் ஷிகாப். 75 வயது மூதாட்டியை எர்ணாகுளத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த வ்ழக்கு ஷிகாப் மீது உள்ளது. இலந்தூர் நரபலியிலும் இதேதான் நடந்தது. மார்பகங்களையும் வெட்டி ரசித்திருக்கிறார். மூளைச்சலவை செய்தே, தன் குற்றங்களுக்கு கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வார்.

ஷாபி என்கிற முகமது ஷிகாப்பிற்கு ஸ்ரீதேவி என்னும் பெயரில் போலி முகநூல் பக்கம் ஒன்று இருந்தது. அதன் வழியாகவே பகவல்சிங்கைத் தொடர்பு கொண்டார். மேலும் தன் முகநூலிலும், உங்களுக்கு ஏதேனும் நிதிப் பிரச்சினைகள் இருந்தால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள் என தன் முகநூலிலேயே வைத்துள்ளார். அதன் போர்வையில் ஷாபி வீசிய வலையில் பகவல்சிங் விழுந்துவிட்டார். ஷாபிக்கும், பகவல்சிங்கிற்கும் இடையே நடந்த முகநூல் உரையாடல்கள் முழுவதும் சடங்குகள் மற்றும் நரபலி குறித்துத்தான் இருந்துள்ளது. ஷிகாப் மீது ஏற்கெனவே எட்டு வழக்குகள் உள்ளது ’என்பதும் தெரியவந்துள்ளது என்று போலீஸார் கூறியுள்ளனர்.

x