நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து; 6 பேர் உயிரிழந்த சோகம்


குஜராத்தில் நின்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் இருந்து அகமதாபாத்திற்கு சொகுசுப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை கிளம்பியது. அகமதாபாத் நெடுஞ்சாலைக்கு பேருந்து வந்த போது, திடீரென டயர் பஞ்சராகி உள்ளது. இதனால் சாலையோரம் அந்த பேருந்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும், நடத்துநரும் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் கீழே இறங்கி பேருந்தின் அருகே சாலையில் நின்றுள்ளனர்.

அப்போது அதே பாதையில் அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று, நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடரும் விபத்துகளை தடுக்க போலீஸாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x